அமெரிக்க மண்ணில் தொடங்கப்பட்ட முதன்மையான சங்கம். 1969 ஆம் ஆண்டு முதல் தமிழ் மக்களை ஒன்றிணைத்து தமிழ் மொழி சிறக்கவும் தமிழர் கலைகள் சிறக்கவும் அயராது பணியாற்றி வருகிறது. சிகாகோ மண்ணில் நடைபெற்ற தமிழர்களின் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அத்தகைய முக்கிய நிகழ்ச்சிகளின் துளிகள் சில…

2026 ஆம் ஆண்டு

இல்லினாய் பல்கலைக்கழகத்தில் (அர்பானா சேம்பெய்ன்) தமிழ்க்கல்வி

அமெரிக்க மண்ணில் தாய்த்தமிழின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க இல்லினாய் பல்கலைக்கழகத்தில் (அர்பானா சேம்பெய்ன்) தமிழ்க்கல்வித் துறையை அறிமுகப்படுத்தும் உன்னத அறப்பணி, சிகாகோ தமிழர்களின் பேராதரவோடு மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது. முதற்கட்ட விதைப்பணமாக $25,000 USD இலக்கு வகுக்கப்பட்ட வேளையில், உணர்வுகொண்ட தமிழ் நெஞ்சங்களின் அளப்பரிய கொடையினாலும், தோளோடு தோள் நின்ற நற்றமிழர் ஆதரவாலும், இலக்கையும் தாண்டி $31,200 USD நிதி திரட்டி ஒரு தனிச்சிறப்பினைப் படைத்துள்ளோம்.

2024 ஆம் ஆண்டு

வணக்கம் அமெரிக்கா!

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்களது அரசு முறைப் பயணத்தில், தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நலவாரியம் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் தமிழ்நாடு அறக்கட்டளை, வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையுடன் இணைந்து “வணக்கம் அமெரிக்கா” என்ற நிகழ்வை ஒருங்கிணைத்தோம். 4000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி முதல்வர் அவர்களை வரவேற்றனர். இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள், பதிவு மற்றும் இருக்கை, உணவு மற்றும் நிதி மேலாண்மை ஆகிய முக்கிய பொறுப்புகளை தலைமையேற்று, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் 2024-26 ஆம் ஆண்டிற்கான செயற்குழு ஒருங்கிணைத்து நடத்தியது.

ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு 

உலகெங்கு திருக்குறளை ஆய்வு செய்து வரும் தலைச் சிறந்த அறிஞர் பெருமக்களின் துணையுடனும் உலகத் தமிழர்களின் பெருத்த ஆதரவுடனும் திருக்குறளை உலக அறநூல் என்று நிறுவும் நோக்கில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் – அமெரிக்கா மற்றும் ஆசியவியல் நிறுவனத்துடன் இணைந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் இந்த மாநாட்டினை நடத்தியது. 1200க்கும் மேற்பட்ட தமிழர்கள் 25க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

2019 ஆம் ஆண்டு

பொன்விழா  – பத்தாம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

வட அமெரிக்காவின் முதல் உலகத் தமிழாராய்ச்சி மாநாடாக “பத்தாம் உலகத் தமிழாராய்ச்சி மாநாடு”, சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் “பொன்விழா”, வட அமெரிக்க தமிழர்கள் ஒன்று கூடும் “தமிழ் விழா” 2019 ஆம் ஆண்டு சூலை திங்கள் நடைபெற்றது. தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல் என்ற நோக்கத்தில் ஆய்வு மாநாடு நடைபெற்றது. உலகெங்கும் இருந்து 6000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்றுகூடி 100க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர் பெருமக்கள் தமது ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்து வரலாற்று நிகழ்வாக அமைந்தது. இந்த நிகழ்வை அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம் மற்றும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையுடன் இணைந்து சிகாகோ தமிழ்ச் சங்கம் நடத்தியது.

2013 ஆம் ஆண்டு

பொன்னியின் செல்வன்

சிகாகோ தமிழ்ச் சங்கம், அமரர் கல்கியின் “பொன்னியின் செல்வன்” புதினத்தை சிகாகோ பெருநகரில் வாழும் தமிழர் பலரையும் ஒருங்கிணைத்து “மேடை நாடகமாக’ நடத்தியது. இந்த நாடக உருவாக்கத்திலும் அரங்கேற்றியதிலும் ஐம்பதுக்கும் மேற்பட்டார் பங்கேற்றனர். 1000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒன்று கூடி நாடகத்தை பார்த்து பாராட்டினர். அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்ட பல்வேறு தமிழ் நாடகங்களில் தனித்துவமாக மக்கள் திரளையும் நாடகக் கலைக்குரிய மரபினை வழுவாது நிகழ்த்தியது சிகாகோ தமிழ்ச் சங்கம். அமெரிக்க தமிழ் நாடக வரலாற்றில் மைல் கல்.