தமிழர் வாழ்வியல் நட்புகளுடனும் உறவுகளுடனும் புத்துணர்வூட்டி மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பல்வேறு விழாக்கள் கொண்டது. விழாக்கள் பொது நோக்கில் அனைவரையும் ஒன்றிணைக்கும். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதன் அடிப்படையில் புலம் பெயர் நாட்டில் புது உறவுகளைத் தேடவும் பேணவும் தளமாக சிகாகோ தமிழ்ச் சங்கம் பல்வேறு விழாக்களை நடத்தி வருகிறது. சிகாகோ தமிழ்ச் சங்கத்தின் விழாக்களில் அனைவரும் பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தமிழர் திருநாள் “பொங்கல் விழா”
பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. சிகாகோ தமிழ்ச் சங்கம் அறுசுவை விருந்துடன் கலை நிகழ்ச்சிகள் வாயிலாக ஆண்டு தோறும் இந்த விழாவினை நடத்தி வருகிறது.
தமிழ் அறிஞர்கள் நாள்
மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளையொட்டி, நம் அன்னைத் தமிழிற்கு அணிசேர்த்த அறிஞர்களை நாம் என்றும் நினைவு கூறும் வகையில், நூற்றாண்டுகளை காணுகின்ற அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் விழா எடுப்போம் என சிகாகோ தமிழ்ச் சங்கம் அறிவித்தது. 2021 ஆம் ஆண்டு துவங்கிய இந்த மரபு “தமிழ் அறிஞர்கள் நாள்” என நடைப்பெற்று வருகிறது.
குழந்தைகள் நாள்
இளைய தலைமுறையினரை தமிழ் மொழி,இலக்கியம், மரபு விழுமியங்களின் பால் ஈர்ப்பதும், அவர்களின் தனித் திறன்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் செய்வதும் “குழந்தைகள் நாள்” விழாவின் நோக்கமாகும். இந்த விழாவில் 5 வயது முதல் 18 வயது இளையோர்களுக்கான பல்வேறு குழு நிகழ்ச்சிகள் அரங்கேறும். மேலும் தனித்திறனைப் பறைச்சாற்றும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி இடம் பெறுகிறது.






