வணக்கம் அமெரிக்கா
அயலகத் தமிழர் நாள் – அமெரிக்கா
செப்டெம்பர் 7, 2024
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 2024 ஆம் ஆண்டு ஆகத்து – செப்டெம்பர் மாதம் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்திருந்தார். தமிழ்நாட்டின் வளம் சேர்க்கும் ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற நோக்கில் அமெரிக்காவின் பல்வேறு தொழில் முனைவோரை சந்தித்து முதலீடுகளை ஈர்ப்பதும், அமெரிக்காவிற்கு புலம் பெயர்ந்துள்ள தமிழ் உறவுகளைச் சந்தித்து தாய் தமிழ்நாட்டின் உறவுக்கு பலம் சேர்ப்பதும், என்ற இரு பெரும் நோக்கில் முதல்வர் அவர்களின் பயணம் அமைந்தது. தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பயணத்தில் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ பெருநகரங்களில் அமையுமாறு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு முனைவர் டி.ஆர்.பி.ராஜா தலைமையில், அயலகத் தமிழர் நலவாரியத்தின் தலைவர் திரு. கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முதல்வரின் பயணத்தை ஒருங்கிணைத்தனர்.
தமிழ்நாடு முதல்வரின் சிகாகோ நிகழ்ச்சி “வணக்கம் அமெரிக்கா” அமெரிக்காவில் புலம் பெயர்ந்துள்ள அனைத்து தமிழர்களையும் சந்தித்து மகிழும் வகையில் உருவாக்கம் பெற்றது. இந்த நிகழ்ச்சியினை தமிழ்நாடு அரசுடன் இணைந்து ஏற்பாடு செய்யும் பணியை சிகாகோ தமிழ்ச் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறக்கட்டளையிடம் வழங்கப்பட்டது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை, தனது உறுப்பினர் சங்ககளை ஒருங்கிணைத்து விழாவில் பங்கேற்கும் பணியை ஏற்றது.மத்திய அமெரிக்காவில் இருக்கும் அனைத்து தமிழ் அமைப்புகளும் விழாவில் பங்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் அமைந்தது.
நூற்றுக்கும் மேற்பட்ட இளைய தமிழ் மாணவர்கள் தமிழ்நாடு முதல்வருடன் இணைந்து தமிழ்த் தாய் வாழ்த்து, இந்திய நாட்டுப்பண், மற்றும் அமெரிக்க நாட்டுப்பண் பாடி நிகழ்ச்சியை துவங்கினர். கலை நிகழ்ச்சிகளில் தமிழர் மரபினை வெளிப்படுத்தும் நாட்டுப்புறக் கலைகளான பறை, சிலம்ப, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகியவை இடம் பெற்றன. பல்சுவை நடனங்கள், தமிழ் இலக்கியச் சுவையான குற்றாலக் குறவஞ்சி நாட்டிய நாடகம் அரங்கேற்றம் பெற்றது.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற, பல்வேறு தமிழ் அமைப்புகளுடன் சிகாகோ தமிழ்ச்சங்க பணியாற்றியது. இருநூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் அயராது பணியாற்றி விழாவினை வரலாற்றில் வெற்றி விழாவாக மாற்றினர்.
முதல்வரின் சிறப்புரை
“இனம், மொழி, நாடு, சாதி, மதம்,பால், வர்க்கம், நிறம் என்று எந்த பாகுபாட்டுக்கும் இடமளிக்காமல், உலக உயிர்கள் அனைத்துக்குமான பொதுமறையை தந்த வள்ளுவரை தந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம். ஊரை தாண்டிய ஊரும் உலகமும் எப்படி இருக்கும் என்று அறியாக் காலத்திலேயே, ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று எல்லோரையும் சொந்தமாக கருதி இலக்கியம் படைத்த புகழுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
கீழடி கண்டுபிடிப்புகள் மூலமாக, 4 ஆயிரம் ஆண்டுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்றும், நகரநாகரிகத்துடனும் மேம்பட்ட சமூகமாக வாழ்ந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம். அதனால்தான் இந்திய துணை கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்படவேண்டும் என்று தொடர்ந்து சொல்கிறேன்.” என்று உரை நிகழ்த்தினார்.
சிகாகோ தமிழர்கள் சந்திப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘‘இமை நேரத்தில் கண்டங்களை கடந்துவிட்ட உணர்வு. சிகாகோ நகரில் வெள்ளமெனத் தமிழர் திரண்ட காட்சியில் தமிழினம் மேலெழுந்து வந்த வரலாற்றைக் கண்டேன். கற்ற கல்வியால் ஒப்பற்ற உழைப்பால் பெற்ற பெருமைகளை தாங்கி, அமெரிக்க மண்ணில்தமிழர் தலைநிமிர்ந்து வாழ்தல் கண்டு தமிழகத்தின் முதல்வராக, திமுக தலைவராக அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். புலம் பெயர்ந்து புலர்ந்தெழுந்த தமிழர்களின் நல்வாழ்வு நாளும் சிறக்க என் வாழ்த்துகளை சொல்லி, அமெரிக்க பயணத்தின் குறிப்புகளில் பொறிக்க அவர்களது மகிழ்ச்சியை என் நெஞ்சில் ஏந்தினேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
