அன்னைத் தமிழ் – நம் மொழி, நம் பெருமை!

வணக்கம். அமெரிக்கத் தமிழர்களின் அடையாளமாகத் திகழும் சிகாகோ தமிழ்ச் சங்கம், தாய்மொழியின் வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. அந்த வகையில், தற்போது நம் முன்னே உள்ள ஒரு மகத்தான வாய்ப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறோம்.
 
நமது மொழி வெறும் பேச்சு மொழி மட்டுமல்ல; அது நமது அடையாளம், பண்பாடு, பெருமையின் சின்னம். இந்தச் செம்மொழி, உலகத்தரம் வாய்ந்த கல்விக்கூடங்களில் அங்கீகரிக்கப்பட வேண்டியது நம் காலத்தின் கட்டாயம். அந்த வகையில், 1867-இல் தொடங்கப்பட்ட வரலாற்றுப் புகழ்பெற்ற இல்லினாய்சு பல்கலைக்கழகத்தில் (UIUC), முதன்முறையாகத் தமிழ் மொழியை ஒரு பாடமாக அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
 
இத்திட்டத்தைத் தொடங்குவதற்கு முதற்கட்டமாக $25,000 அமெரிக்க டாலர் விதைப் பணம் (Seed Fund) திரட்ட இலக்கு வைத்துள்ளோம். இந்த நிதி ஒரு நிரந்தர அறக்கட்டளையாக (Endowment) மாற்றப்பட்டு, அதன் மூலம் வரும் வருவாய், ஆண்டுதோறும் தமிழ் கல்வி கற்பிக்க பயன்படுத்தப்படும்.
 
இது ஒரு தொடக்கம் மட்டுமே! எங்களது இறுதி இலக்கு UIUC-இல் ஒரு “நிரந்தரத் தமிழ் இருக்கை” (Permanent Chair for Tamil) அமைப்பதாகும். இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த அறிஞர்களின் விரிவுரைகள், மாணவர் பட்டறைகள் வாயிலாகத் தமிழ் மொழியின் மணம் உலகெங்கும் பரவும். நமது பண்பாட்டைக் காக்கவும், வளர்க்கவும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் தங்களது ஆதரவினையும் உங்களால் இயன்ற நிதியுதவியை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். உங்களின் ஒவ்வொரு பங்களிப்பும் உலக அரங்கில் தமிழின் புகழை நிலைநாட்ட உதவும். தமிழை உலகளாவிய உயர்கல்வி மேடையில் ஏற்றிடுவோம்!